சனி, 14 ஜனவரி, 2023

  


சொற்களை பகடையாய் உருட்டுகிறாய்

உன் கண் அசைவில் புரண்டு தாயங்களாகின்றன


சில நேரங்களில் வெறும் குறிப்புகளையாய் 

இருக்கிறது உன் உரையாடல்கள்


வெறுமனே சலனமற்று 

ஒரு நாடகத்தின்  உரையாடலை  கேட்பது 

என்னை சலிப்படைய வைக்கிறது


பனிக்கட்டியாய் உருகும் வார்த்தைகளில் 

நீ சொல்லாத சொற்களும் இருப்பதை நானறிவேன்


உன் சொற்களின் லாவகம் 

பலவீனமான என் இதயத்தை அதிர்விக்கின்றன


உன் சொற்கள் 

என் கபாலத்தில் எதிரொலித்து 

நெற்றிப்பொட்டில் வலியாய்  பரவுகிறது


சமயங்களில்

என் எதிர்சொற்கள்

உன் ஒற்றைச்  சொல்லில்

குருதி சொட்ட விழ்கின்றன


.விவேகானந்தன்

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

இசைவானதொரு...

நான் சொல்வதுனக்கும்
நீ சொல்வது எனக்கும்
புரியாமல் போகிறது
சமயங்களில்.

சாட்டையென
நீண்டு சொடுக்குகிறது உன் நாக்கு
குருதி கட்டிய தடிப்புகளாய்
பரவுகிறது துக்கம்.

உன்னிடம் நான் கேட்பதெல்லாம்
விரிந்த வான்வெளியில்லை
இசைவானதொரு கூடு.

திங்கள், 16 ஏப்ரல், 2012

மழையும் மழைகிளர்ந்த உன் நினைவுகளும்..


இந்த மழை இரவில்
எரியும் மெழுகுவர்த்திகளோடு
நானும் கரைந்து கொண்டிருக்கிறேன்.

காற்றுக்கும் மழைக்கும் என்ன கசமுசாவோ
இரைந்து பேசுகின்றன.

அப்படி என்ன சொல்லிவிட்டது இந்த காற்று
தலையசைத்து மறுக்கின்றன மரங்கள்.

எப்போதோ ஒரு மழைக்கு
உன் குடை எடுத்துப் போன  ஞாபகத்தில்
இப்போது நனைகிறேன்.

என் மேனி தொட்டு போகும் ஈரக்காற்றில்
உன் மெல்லிய விரல் தீண்டும் உணர்வு.

மழைநீர் இழுத்துப் போகிற
இந்த ஒற்றைச் செருப்பின் இணை
என்னைப் போல் எங்கே தனித்திருக்கிறதோ.

உன் மின்னல் விழிகளின் வீச்சில்
வீழ்ந்து கிடக்கிறேன்
துருவங்களுக்கப்பால் தூரதூரத்தில்.

மழையில் நனையாமல்
இந்த பறவைகளெல்லாம்
எங்கே போய்விட்டன.

 உன் நினைவில் நனைந்து
நடுங்கிக் கொண்டிருக்கிறேன்
 ஒதுங்க முடியாத ஓரிடத்தில்.

- விவேகா






ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

மழையும் - உன் நினைவும் ...



இரவின் மீது மெல்லிய தூறலாய்
மழை பெய்து கொண்டிருக்கிறது.

காற்றும் மழையும்
காதலாகி கசிந்துருகிக் கொண்டிருக்கிற இந்த நிசியில்
ஊளையிடுகிற தெருநாயின் குரலாய்
அகலத்தின் அகண்டவெளியில் ஒலிக்கிறதென் குரல்.

காலமே அறியும்!
என் மனக்குளத்தில் நீயெறிந்த சொற்கள் ஏற்படுத்திய
அலைகளின் சலனத்தை.

குளிருக்கு பயந்தோ கொசுவுக்குப் பயந்தோ
எல்லோரும் இழுத்து மூடி உறங்கிக் கொண்டிருக்க...
நான் பிரியத்தைச் சொல்ல வலுவற்ற வார்த்தைகளில்
உன் நினைவுகளோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன்.

கரையோரச் செடிகளை தொட்டிழுத்து
சலசலத்துப் போகிற
ஓடைநீரின் குதூகுலமாய் கழிந்த
சில ரம்மியமான பொழுதுகளின்
தடங்களை மட்டும் விட்டுவிட்டு
மெல்ல நகர்ந்துவிட்டது காலம்.

சுவரஸ்யமாய் வாசித்துக் கொண்டிருக்கிற
நாவலின் ஒருபாதியை யாரோ
கிழித்தெடுத்துப் போய்விட்டது போலிருக்கிறது
நீ எனக்கில்லை என்றான பின் இந்த வாழ்க்கை.

பாரம் இழுத்தோய்ந்து
கண்கிறங்க ஆகாரத்தின் மிச்சங்களை
அசை போடுகிற மாடும்
இந்த நடுநசியில் காதலின் ஞாபகங்களை
அசை போடுகிற நானும்
ஒன்றா தெரியவில்லை

சாளரத்தின் கதவுகளை தள்ளிக் கொண்டு நுழைகிற
குளிர்ந்த காற்றின் இதமான தழுவலாய் இருந்தது
இன்றைக்கும் புரிபடாத காதலின் ரகசியத்தை 
நாம் கண்களால் பேசிக் கொண்டிருந்த பொழுதுகள். 

என் இருண்டவானில்
சிறகசைத்து போனதொரு வெள்ளைப் பறவை நீ.

நம்மிடையே வார்த்தைகள் உலர்ந்து
மெளனம் படர்ந்திருக்கிற
இக்காலத்தின் எதிர்பாரா சந்தர்பங்களில்
நாம் சந்தித்துக் கொள்ள நேர்கிற பொழுதில்
என்ன நினைத்துக் கொள்வாய்
என்பதான யோசனைகளால்
கழிந்து கொண்டிருக்கிறது காலம்.

உன் உதட்டுச் சுழிப்பில்
கண்களின் வசீகரத்தில் 
உறைந்திருக்கிற என் மொழியால்
உணர்த்த முடியாத
குருதி கசியும் நம் பிரிவின் துயரை 
சுரம் பிரித்து பாடிக் கொண்டிருக்கிறது மழை. 

மழையின் சங்கீதங்கள் எப்போதும் எனக்கு
உனைப் பற்றியதாகவே இருக்கிறது.

மழை நிற்பதற்கான அறிகுறிகள் இல்லை.

மழை கிளர்ந்த உன் நினைவுகளுடன்....

-விவேகா








சனி, 14 ஏப்ரல், 2012

அரிதாரம்



யாரும் அறிந்து கொள்ள முடியாத
அரிதார அடுக்குகளால்
ஆகி போனதென் முகம்.

நீங்கள் நினைத்திருக்கிறபடி
நானில்லை என்பது
எனக்கு மட்டுமே தெரியும்.

நான் நானாயிருக்கிற சந்தர்பங்கள்
எப்போதாவதுதான் வாய்க்கிறதெனக்கு.

மதிப்பீடுகள் அனைத்தும் 
மாறிப்போகிற கால ஓட்டத்தில்
நீங்கள் நினைத்திருக்கிறபடியே
நாளை நான் மாறிப்போகலாம்.

யாரும் அறியாதபடி.

- விவேகா

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

காதலின் மொழி!




பேசாது  பேசும் பெருவிழிகளுனக்கு...

 உன் தோள் சாய்ந்து
கைவளையலை வருடியபடி
மெளனமாய் கழிந்திருக்கின்றன
பல யெளவன பொழுதுகள்.

காதலுக்கெதிரான கயவர்கள்
நம் நாவறுத்த பின்னும்
இன்றைக்கும்
பேசாது பேசுகின்றோம்.

பாவம் அவர்கள் அறிந்திருக்கவில்லை
காதலின் மொழி மெளனமென்று.

-விவேகா





வியாழன், 12 ஏப்ரல், 2012

புறக்கணித்தென்னை...























நீ என்னை புறக்கணித்து
தூக்கியெறிந்த இடம்
இலந்தை முட்கள் அடர்ந்த
இடுகாட்டுப் பிணங்களின் புதைகுழி.

மெளனத்தைக் கொல்கிற
ஆவேசத்தோடு மண்டையோடுகள் சிரிக்க
அழுகி நாற்றமடிக்கும் பிணக்கழிவில்
முட்கள் கிழித்து குறுதி கசியும்
என் உடம்பை துடைத்தபடி
வழுக்கி வழுக்கி வீழ்ந்து 
மெல்ல மெல்ல
செத்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு வேளை
நான் உயிர் பிழைத்து எழுந்து வந்தால்
உன் கூரிய நகங்களால்
என் இதயத்தை கிழித்து
துஷ்ட தேவதைகளுக்கு பழியிடு
ஒரு சுனியக்காரியைப் போல

அல்லது
உன் வலுவெல்லாம் திரட்டி
என் மண்டையோடு சிதற
கபாலத்தை உடைத்தெறி.

மண்டையோடு சிதைந்த
என் பிணத்தின் மீது கால் வைத்து
மயானத்தில் ஒளிந்திருக்கிற
பேய்களும் பிசாசுகளும்
பயந்து நடுங்கியோட கூக்குரலிடு.

இனி நேசத்தை சொல்கிறவர்களின் 
நாக்குகள் அறுக்கப்படுமென.

-விவேகா